மேரு மலையில் இருந்து சிதறிய ஒரு பகுதியே மலையாக இருப்பதால் இத்தலம் 'கொடுங்குன்றம்' என்று அழைக்கப்படுகிறது. கடையெழு வள்ளல்களுள் ஒருவரான பாரி மன்னன் வாழ்ந்த பரம்பு மலையான இப்பகுதியே, பின்னர் 'பிரான்மலை' என்று மருவியது. இது ஒரு மலைக் கோயில். அடிவாரத்தில் ஒரு கோயிலும், நடுவில் ஒரு கோயிலும், மலைமீது ஒரு கோயிலும் உள்ளது. திருஞானசம்பந்தர் இம்மலையைக் கண்டபோது 'எம்பிரான் மலை' என்று தமது பதிகத்தில் பாடியதால் 'எம்பிரான் மலை என்ற பெயர் பெற்று, பின்னாளில் 'பிரான்மலை' என்று மருவியதாகவும் கூறுவர்.
அடிவாரக் கோயில் மூலவர் 'கொடுங்குன்றநாதர்' என்னும் திருநாமத்துடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'குயிலமுத நாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். இவரே திருஞானசம்பந்தர் பதிகம் பெற்றவர்.
நடுவில் உள்ள கோயிலில் கடோரகிரீஸ்வரர் சன்னதி உள்ளது. மலை மீது உள்ள கோயிலில் மூலவராக சிவபெருமானும், பார்வதியும் திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றனர். அவருக்கு முன் சிறிய லிங்கம் ஒன்று உள்ளது.
பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி தேவசேனை சமேத சுப்பிரமண்யர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நடராஜர், அறுபத்து மூவர், சண்டேஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
பத்மாசுரனை கொன்ற தோஷம் நீங்க, முருகப்பெருமான் இத்தலத்து இறைவனை வழிபட்டதாகத் தல வரலாறு கூறுகிறது. அருணகிரிநாதருக்கு, முருகன் நடனக் காட்சியைக் காட்டியருளிய தலம்.
அகத்தியருக்கு இறைவன் தனது திருமணக் கோலத்தை காட்டியருளிய தலம்.
பிரம்மா, சரஸ்வதி, முருகப்பெருமான், நந்திதேவர், உபமன்யு முனிவர், மகோதர முனிவர், நாகராஜன் ஆகியோர் வழிபட்ட தலம்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். மலைக்கோயில் மாலை 6.30 மணி வரை மட்டும் திறந்திருக்கும்.
|